புத்துயிர்ப்பு/லியோ டால்ஸ்டாய் நாவல்/முதல் பாகம்/அத்தியாயம் 4,5
4 காப்பி சாப்பிட்டு முடித்ததும் நெஹ்லூதவ், எத்தனை மணிக்கு நீதிமன்றத்துக்குப் போக வேண்டுமென்று அழைப்பாணையை எடுத்துப் பார்ப்பதற்காகவும், இளங் கோமகளுக்குப் பதில் எழுதுவதற்காகவும் தமது அறைக்குச் சென்றார். அங்கே செல்ல அவர் தமது கலைக்கூடத்தைக் கடக்க வேண்டி.யிருந்தது. கலைக்கூடத்தில் இன்னும் நீட்டி முடிக்கப் பெறாத உருவச் சித்திரம் ஒன்று நிலைச்சட்டத்தில் இருந்தது. நேர் எதிரே சுவரில் சில ஓவிய உருவரைகள் தொங்கின. இரண்டு ஆண்டுகளாய் அவர் பாடுபட்டு வந்திருந்த அந்த உருவச் சித்திரமும், பிறகு அந்த உருவரைகளும், அந்த ஓவியக்கூடம் அனைத்துமே, ஓவியக் கலைதமக்குக் கைவராத ஒன்றெனச் சிறிது காலமாய் அவர் மனத்துள் எழுந்து வந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவனவாய் நினைத்தார் அவர். கலையில் தமது உணர்வு நிலை வெகுவாய் உயர்ந்து விட்டதால்தான் இப்படி ஓர் எண்ணம் ஏற்படுவதகாகத் தமக்குத் தாமே ...